இரு கவிதைகள்

June 24, 2008

கனவுகள் தொலைந்த
இரவொன்றில்
உறக்கம் விரட்டிச் சென்றேன்
இருளில் ஒளிந்திட்டதை
தேடவே முடியவில்லை

பொழுதெல்லாம் ஓய்ந்த நிலையில்
தொலைத்ததற்காய்
காத்திருக்கிறேன்
இருக்கும் வெளிச்சப் புள்ளிகள்
கருமை அழிக்க போதவில்லை

கிடைக்கின்றவை எதுவும்
என்னுடையதாய்
இல்லை
எது என்னுடையது
என்பதற்காகவும் எதுவுமில்லை

இருந்தும் தேடிக்கொண்டிருக்கிறேன்

************************************

கனவுகள் தொலைந்த இரவொன்றில்
உறக்கம் விரட்டிச் சென்றேன்
இருளில் ஒளிந்துக்கொண்டதால்
தேடவும் முடியவில்லை

கையில் இருப்பவை அந்நியமாகிவிட
கிடைக்கின்றவை எதுவும்
என்னுடையதாயில்லை

இருக்கும் வெளிச்சப் புள்ளிகள்
கருமை அழிக்க போதாமல்
இரவெல்லாம் ஓய்ந்த நிலையில்
தொலைத்ததற்காய் காத்திருக்கிறேன்

தேடித்தேடி களைத்து உறக்கம்
சரிந்துவிழ
விடியலில் கிடந்தது
பெரும்கனவு

Advertisements

21.06.2008

June 21, 2008

இது நாள் வரையில் ,
கூகுளாண்டவரின் தயவில் வீடு கட்டி வாழ்ந்திருந்த நான், சொந்த வீட்டுக்கு புலம் பெயர்கிறேன் இந்நன்னாளில்..,
என் கிறுக்கல்களை வழக்கம்போலவே http://www.thiruvilaiyattam.com/ என்கிற என் சொந்த வீட்டில் படித்துப்பார்க்கலாம். என்னையும் ken@thiruvilaiyattam.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

சொந்த வீடு வாங்கிக்கொடுத்த
ஸ்ரீராம் (வளர்ந்து கெட்டவன், பாண்டிச்சேரி, ஏதோ டாட்டா கன்சல்டன்சில காப்பி, பேஸ்ட் பண்டர வேலைங்க அதாங்க சாப்ட்வேர் எஞ்சினியரமாம்.) அவனை www.workowork.com/ -ல் கண்டுப்பிடிக்கலாம் , மரத்தை முட்டுக்கொடுத்துக்கிட்டு நிக்கிறான் பாருங்க அவந்தான் .
நன்றி மாமா !

**************************************************************

இந்த நாளில்தான் எனக்கு சென்ற ஆண்டில் மிக மிக முக்கியமான நிகழ்வும் அதைத்தொடர்ந்து நிறைய மாற்றங்களும் நடந்தது.

என் எல்லா கோபங்களையும் , புலம்பல்களையும்,நெருக்கடிகளையும் பொறுத்துக்கொண்டு எப்போதும் போல புன்சிரிப்பு மாறாமல், எனக்கான தோழமையை எல்லா தருணங்களிலும் துளியும் மாறாமல் , கரம்பிடித்து அழைத்துச்செல்லும் உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இன்னைக்கு மட்டும்தான் சண்டை போட மாட்டேன் ,
நல்லா சந்தோசமா பிறந்த நாள் கொண்டாடிட்டு வா!


உயிர்குலையும் ஊரின் பெரும்பயணி

June 19, 2008

உயிர்குலையும் ஊரின் பெரும்பயணி – த. அகிலனின்

தனிமையின் நிழல்குடை – ஒரு பார்வை

மு.ஹரிகிருஷ்ணன்..,

(கட்டுரையாளர் மயில் ராவணன் சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர், சிறந்த சிறுகதையாளர், இறக்கை சிற்றிதழின் இணையாசிரியராக பணியாற்றியவர், மணல் வீடு இதழின் ஆசிரியர், நலிவுற்ற கூத்து கலைஞர்களுக்காய் கூத்துப்பட்டறை வைத்திருப்பவர் )

விடலைப்பருவம் விட்டு வாலிபப்பருவம் ஏகிய யுவன் ஒருவன் தனக்கு ப்ரியமானவளிடத்து, உறவுகளிடத்து கொண்டதும், கொடுத்ததுமாகிய நேசம்,அன்பு,காதல்…,

இவற்றை ஒருசேர இட்டு நிரப்பிய முத்தங்கள்,புன்னகைகள்…. வாழிடத்து போர்வரின், பிரிதலில் அவை குறித்து ஓங்கிப்பெருகும் நினைவுகள்,ஞாபகங்கள்,கூடவே இயற்கை மீதான பிரேமை,புலம்பெயர்ந்த வாழ்வின் அசாதாரண சூழல், அதன் வாதைகள் என அகிலன் கொஞ்சம் அகலக்கால் வைத்திருக்கிறார். எனினும் அவற்றின் சுவடுகள் ஒருசில கவிதைகளில் மிகவும் அழுத்தமாக பதிந்திருக்கிறது.
மழையைச் செல்லப்பிராணியாக்கி கதவை பிறாண்ட வைப்பதிலிருந்து , தலையணைக்கடியில் மறைந்திருக்கும் கனவுகளை மழையில் நனைய தூக்கமாக்கப்பட்டது அழைத்துக்கொண்டு போவது வரை,

படகோட்டி தான் புகைக்கும் பீடியில் திசைகள் எரிவதிலிருந்து

” பகலின் நிறம் மரணம்
இரவின் நிறம் பயம் “

என்று வன்முறையின் கொடூரங்களை சொல்வது வரை, தெருப்புழுதி , அண்ணியார் பிசைந்திட்ட சோறு,குளிர்மை தவழும் தாழ்வாரம், குழந்தைகளின் எச்சில் முத்தங்கள், தன் நிழல் புழுங்கிய பழைய வீடு, தனக்கே சொந்தமான நாடு இவையன்றி உயிருள்ள கவிதை எழுத முடியாததின் சோகத்தை வலியை சொல்லுமிடத்து,

இயலாமை, வேதனை,அவமானம்,அழிவுகளுக்கு சாட்சியாய் மெளனத்தை விழுங்கிக்கொண்டிருப்பது, நாற்பது வயது கன்னியின் நெற்றியில் துலங்கும் கறுத்தப்பொட்டாய் நிஜம் தன்னை உறுத்தும் குற்ற உணர்ச்சியில் உழலும் போது நிரந்திரமின்மையின் அந்தரத்தினும் அமிழ்ந்து , புதுப்புது வடிவங்கள், புதுப்புது பாத்திரங்களாக இலங்கும் தருணங்களில் தன்னை வடிவங்களற்ற சோதியாக உணர்த்த யத்தனிக்கும் போதும், காலடிக்கு விழித்துக்கொள்ளும் சர்ப்பமென காமத்தை உருவகப்படுத்தும்போதும்,

அகிலனுக்கு வாய்த்திருக்கும் சொல் சாத்ரிகம் வயதுக்கு மீறிய ஒன்று!

வெளியற்ற வாழ்வு , கேள்வியாகிவிட்ட இருப்பு, கால் பாவுவதையும் கண்காணிக்கப்படுகிற அடுத்த கணங்கள் பற்றிய அச்சங்கள், துயரங்கள் நிரம்பிக்கிடக்கும் வாழ்தடத்தில் அமைந்திருக்கும் உயிர்குலையும் ஊரின் பெரும் பயணியாகிய அகிலன் இத்தொகுப்பில் நோக்கும் அரசியல் பார்வை கூர்மையற்று சற்று மேலோட்டமானதாகவே இருக்கிறது.

அதற்கு காரணம் இதுவாகவும் இருக்கலாம்..,

ஒரு கட்டிளம் காளையிடம் இளமை விழித்து கிளை பரப்பும் போது அதன் வேர், மூலத்தை பற்றியே நிற்கிறது. வேண்டுவது பெற்று , விரும்புவது சிந்தித்து நிறைவெய்துகையில் அவன் முனைப்பாக காரியம் கருதுவான்.

மழை, முத்தம்,புன்னகை போன்ற பதங்கள் நேர்முகமாக உள்ளடங்கிய கவிதையாடல்கள் பிரதியில் ஏகமாக காணக்கிடைக்கிறது. என்னைப்பொறுத்த வரை கூறியது கூறல் குற்றமில்லை, ஆனால் வாசிக்குங்கால் அலுப்புத்தட்டக்கூடாது .

அகிலன் இத்தொகுப்பில் வைத்திருக்கிற கவிதைகளில் எதேச்சையாக அது நேரிட்டிருக்கிறது.

(நன்றி : மு. ஹரி கிருஷ்ணன், ஆசிரியர் மணல் வீடு இதழ்)

காட்டு முனி கிராமத்தான்

June 18, 2008

சுத்துப்பத்து ஊர்ல நாகூரான தெரியாதவங்க யாரும் இல்லை. மாட்டுத்தரகுல அவன அடிச்சிக்க ஆளு நாகை ஜில்லாவிலேயே இல்லன்னு பேசிப்பாங்க.

மாட்டு வால்ல இருந்து கால் நகம் , கோணச்சுழி ,கொச்சுச்சுழின்னு பாத்து கழிச்சுக்கட்டறதுல கில்லாடி , மாடு வாயப்பாக்காமலே பல்லு இத்தனைன்னு பளீர்ன்னு சொல்லி அதோட மூதாதையர பத்தியும் சேத்துச்சொல்லி மாட்டுக்குச்சொந்தக்காரன மிரள வைக்கிற பக்குவம் நாகூரானுக்கு மட்டும்தான் உண்டு.

வாங்கிறப்போ பாக்கிற சுழிக்கெல்லாம் , பதவிசா மூஞ்சிய வைச்சிட்டு கோளாறு சொல்ற ஆளுவிக்கிறப்போ அதையே இந்திர சுழி, அர்ச்சினன் கழின்னு தூக்கி வச்சிப்பேசி ஒன்ன ஒம்போதா ஆக்கிற அசுரன்.

எந்த காளைக்கு , எப்போ இளம வரும் , எந்த பசுவுக்கு எந்த சோடி சேக்கனும்னு சுத்துப்பட்டு எல்லா ஊர்க்காரங்களும் நாகூரான தேடாத நாளிருக்காது.மாடும் , சுழியுமா கிடந்து அல்லாடிட்டு இருந்தவனுக்கு எங்க எந்த மவராசி வரப்போறாளோன்னு ஊர் முழுக்க ஒரு பேச்சு இருக்கும்.

அதும் எவன் கல்யாணம் ,காதுக்குத்து, சடங்குன்னாலும் எல்லார்கிட்டேயும் இடக்குப்பேசிட்டு முதப்பந்தில உக்காந்து கடைசிப்பந்தில எந்திரிக்கிற நாகூரானுக்கு மரக்கா அரிசிச்சோத்த பொங்கிப்போட வரப்போரவ மகராசியாதானே இருக்கனும்னு கிழங்கட்டைக வம்புக்கு இழுக்கும் .

வயசான கிழவிக வாடா என்னைக்கட்டிக்கடான்னு பொக்க வாயத்திறந்து பொரனி பேசுங்க. எல்லாத்துக்கும் எம் காட்டு முனிப்பாத்துப்பான்னு சொல்லிட்டே போயிடுவான் .
ஆளும் ஓங்குதாங்கா கருப்பண்ண சாமிக்கணக்கா எண்ணெ வழியர முகமும் ,எப்போவும் புகையிர பீடியுமா நல்லா லட்சணம்தான்னு சொன்னாலும், வாய்க்கடியில புதைச்ச புகையிலையும் , கோட்டு வாயோட வழியிற வெத்தலைச்சிவப்பும் பாக்கிரவங்கள லேசுபாசா மிரள வைக்கும்.

ஏதோ ஊருக்கு வியாபார‌த்துக்கு போன‌வ‌ன் பாத்துப்புட்டான்யா க‌ல்யாண‌த்துக்குப்பொண்ணு. பொண்ணும் சும்மா ல‌ட்ச‌ண‌மா கோயில் சிலை மாதிரி அடிக்கிற காத்தில பறக்கிற கணக்கா ராச்ச‌ஷ‌னுக்கு கொஞ்ச‌மும் பொறுத்த‌மில்லாத‌ பொம்ம‌க்க‌ண‌க்கா இருக்கா.

பொண்ணு பாத்த‌ நாள‌லேருந்து வாய்க்கொள்ளா சிரிப்பா வெள்ள‌யும் சொள்ள‌யுமா தெக்கேயும் வ‌ட‌க்கேயும் தெச‌த்தெரிய‌மா திரிய‌றான் ந‌ம்ம‌ ஆளு. உன்ன‌ப்பிடி என்ன‌ப்பிடின்னு ம‌ழ‌ ஓஞ்ச‌ ம‌க்காநாளுல‌ ந‌ல்லா க‌ல‌ம் அரிச்சோறும் , ஆட்டுக்கிடா ரெண்டுமா விருந்தோட‌ காட்டுமுனி கோயில்ல‌ ந‌ட‌ந்திச்சியா க‌ல்யாண‌ம்.

ம‌றுவீடு விருந்துக்கு மாமியார் வீட்டுக்கு போயிட்டு வ‌ந்த‌ ந‌ம்ம‌ ஆளு த‌னியா வ‌ந்திட்டான். பொண்ண‌யும் காணோம் ஒண்ண‌யும் காணோம். வ‌ந்த‌ அன்னைக்கே காட்டுமுனி கோவில் சூல‌த்தை பிடுங்கிக்கிட்டு ஊர‌ச்சுத்தி வ‌ந்தான்னும் , எதுக்க‌ வ‌ந்த‌ பிடிக்க‌ வ‌ந்த‌ எல்லாரையும் குத்த‌ பாத்தான்னும் ப‌ய‌த்தோட‌ பேசிக்கிட்டாங்க‌ ப‌க்க‌த்துல‌ பாத்த‌வ‌ங்க‌.

நித‌மும் சாராய‌மும் ராத்திரியான‌ சூல‌ப்பிடுங்க‌லுமா ஊர‌ச்சுத்தி இவ‌ன் ப‌ண்டிர‌ அட்டகாச‌ம் தாங்காம‌, பொண்ணுக்க‌ட்டின‌ ஊருக்கு ஆள‌னுப்பி விட்டாங்க‌ ப‌ஞ்சாய‌த்து பெருசுங்க‌.

போன‌வ‌ன் கூட‌வே பெரும்ப‌டையா திரும்பி வ‌ந்திச்சுயா பொண்ணுக்குடுத்த‌வ‌ன் கூட‌ப்பொற‌ந்த‌ உற‌முறைங்க‌. பொண்ணுக்கு சீர் சென‌த்தி, முட்டாயி, முருக்குன்னு எல்லாமுமா இவ‌ங்கூட‌த்தானே அனுப்பி வ‌ச்சோம் எம்பொண்ண‌ என்ன‌ ப‌ண்ணினான்னு கேட்டுச்சொல்லுங்க‌ , இல்லாட்டி அவ‌ன‌ எங்ககிட்ட‌ விட்டுடுங்க‌ன்னு கூச்ச‌லும், கொழ‌ப்ப‌முமா ந‌ட‌ந்திச்சியா ப‌ஞ்சாய‌த்து.

ஆல‌ம‌ர‌த்துல‌ க‌ட்டிவ‌ச்சி அவ‌ன‌வ‌ன் க‌யி நோவ‌, வாயி அச‌ர‌ அடிச்சி, திட்டி முடிஞ்ச‌ ம‌ட்டும் என்னென்ன‌மோ ப‌ண்ணிப்பாத்தாங்க. மூனு நாளா க‌ட்டி கிட‌ந்த‌வ‌ன் வாய‌த்தொர‌க்கிற‌ வ‌ழிய‌க்கானோம்.
க‌ட‌சியா குறிப்பாக்கிற‌துன்னும் அப்பவும் துப்புக்கிட‌க்கிலேன்னா தொப்பிக்கார‌ங்க‌ளுக்கு(போலீஸ்)சொல்லிவிடுற‌துன்னும் பேசிக்கிடிச்சிங்க‌ பெரிசுங்க‌. ந‌ம்ம ஆளு வெறிச்ச‌ பார்வையும் சிவ‌ப்புக்க‌ண்ணுமா முழிச்ச‌ப‌டி வ‌லித்தாங்காம‌ அர‌ட்டிக்கிட்டு இருந்தானே த‌விர‌ வாய‌த்தொர‌க்கிற‌ வ‌ழிய‌க்காணோம்.

காட்டுமுனிக்கு ப‌டைய‌லோட‌ குறிப்பாக்கிற‌துன்னு முடிவான‌தால‌, வ‌ழ‌க்க‌ம்போல‌ புதுசா காச்சின‌ சாராய‌ம் ஒரு பாட்டில், வெட‌க்கோழி ரெண்டு , இள‌ங்கிடா ஒன்னு , சுருட்டு நாலு,வெள்ள‌ வேட்டின்னு செக‌சோதியா திரிஞ்சாரு கோட‌ங்கி.
ஆச்சுங்க ஆளரவம் அடங்கி, ஊர்க்குருவி எல்லாம் மறஞ்ச நட்ட நடு ராத்திரில, கிழ‌க்க‌ சுடுகாட்டுக்கு த‌ன்ன‌ந்த‌னியா போயி பொத‌க்குழி ம‌ண்ணும் , எலும்பு ஒண்ணுமா எடுத்துக்கிட்டு வெறிப்பிடிச்ச‌ மாதிரி வ‌ந்தான்யா பூசாரி .வ‌ர‌ப்போ எதித்தாப்பில‌ ஆளு வ‌ந்தா அங்கேயே ர‌த்த‌ம்க‌க்கி செத்துப்போயிடுவாங்க‌ன்னு கால‌ம் காலமா க‌தைக்க‌ட்டி விடுர‌தால‌ ஒரு குஞ்சி குளுவானையும் காணோம்.
காட்டுமுனி கோயிலுக்கு ப‌க‌ல்ல‌ போனாலே குலை ந‌டுங்கும் நட்ட‌ ந‌டு ராத்திரில‌ கேக்க‌வே வேணாம். வேட்டைக்கு போற‌ நாய்க்கண‌க்கா கோழி ரெண்டையும் குர‌வளய‌க்க‌டிச்சி திச‌க்கொண்ணா துப்பினான்யா பூசாரி. அடுத்தாப்ப‌ல‌ அச‌ல் சாராய‌த்தை அலுங்காம‌ உள்ளிர‌க்கினான் உறும‌லோட‌, ஏற்க‌ன‌வே ச‌டையும் கோர‌மா இருக்கிற‌ அவ‌ன் முக‌ம் ர‌த்த‌சிவ‌ப்பா விகார‌மா மாறி காட்டு முனியே அவ‌ந்தானேன்னு குலை ந‌டுங்க‌ வைக்குது . மெல்ல‌ ஆர‌ம்பிக்கிற‌ உட‌க்கை ச‌த்த‌ம் உசிர‌ ப‌த‌ற‌ வைக்குது, உக்கிர‌ம் ஏற‌ ஏற‌ சும்மா ப‌ள‌ ப‌ள‌ன்னு தீட்டி வ‌ச்ச அருவாளாலா போட்டான் ஓங்கி ,ஆட்டுக்க‌டா த‌லை த‌னியா போயி ர‌த்த‌ம் பீறிட்டு அட‌ங்கிச்சு.

நாக்கும் ப‌ல்லும் ம‌ட‌க்கி நாகூரான‌ க‌ண்ணுக்கு நேரா நிறுத்தி அவ‌ன‌ த‌லை ம‌சிர‌ பிடிச்சு உலுக்கினான் பாருங்க‌ , நின்ன‌ சின்ன‌ ப‌ய‌வெல்லாம் அங்கேயெ ட‌வுச‌ர‌ ந‌னைச்சிப்புட்டானுங்க‌. நொண்டி முனி , குதிர‌ வீர‌ன், க‌ருப்புச்சாமி, காத்துன்னு எல்லா சாமியும் ஒன்னா கூப்பிட்ட‌ பின்னாடி பூசாரி சொன்னாம் , தெக்கே தொல‌ தூர‌மா , வேற‌ வ‌ழில‌ வாழ‌றா நாகூரான‌ அவுத்து விடுங்க்க‌ன்னு.

அடுத்த‌ நாளிலேர்ந்து நாகூரான‌ பாக்க‌வே முடிய‌ல‌. கொஞ்ச‌ நாள் க‌ழிச்சு நாகூரான‌ கொம்பு மாடு குத்திடுச்சுன்னு கேள்விப்ப‌ட்டேன்

வீட்ட‌ விட்டு தெச‌ மாறி, திக்கு மாறி மெட்றாஸ் வ‌ந்த‌ புதுசுல‌ , திருவேற்காடு ப‌க்க‌த்துல‌ நான் த‌ங்கியிருந்த‌ ரூம் ப‌க்க‌த்துல‌ ஒரு பைய‌ன் த‌யிர் விக்க‌ வ‌ருவான் . அவ‌ன் பேரு நாகூரான்னு சொன்னான்.

அவ‌ன் அம்மாவை பாத்த‌ப்போ திக‌ச்சி போயிட்டேன், நாகூரானோட‌ காணாம போன‌ பொண்டாட்டி இங்க‌ எப்ப‌டின்னு யோச‌னையிலேயே ரெண்டு மாச‌ம் போயிடுச்சி.

ஒரு ஞாயித்துக்கிழ‌ம‌ அவ‌ங்க‌ளே த‌யிர் எடுத்து வ‌ந்தாங்க‌ ஆன‌து ஆக‌ட்டும்னு ஊர்ப்பேர‌ச்சொல்லி தெரியுமான்னு கேட்டேன்.முக‌ம் மாறி , நாகூரான் எப்ப‌டி இருக்கார்ன்னு கேட்டு அழுதாங்க‌.

க‌ல்யாண‌த்துக்கு அப்ப‌ர‌மா த‌ன்னோட‌ காத‌ல‌ சொன்ன‌தால‌ , த‌ன்னையும் த‌ன் காத‌லையும் ம‌திச்சி ஊர‌விட்டு அனுப்பி வ‌ச்ச‌ அந்த‌ நாகூரான் எப்ப‌டி இருக்கார்ன்னு கேட்டாங்க‌.

கொம்பு மாடு குத்தி, குட‌ல் ச‌ரிஞ்சி , பாக்க‌ ஆளு இல்லாம‌, கொஞ்ச‌ நாளிலே பைத்தியமா திரிஞ்சி காட்டுமுனி சூல‌த்தில‌ குத்திட்டு செத்துப்போன‌ அவ‌ர‌ ந‌ல்லாயிருக்கார்ன்னு சொன்னேன்.


கொஞ்சமாய் காமம் ..,

June 11, 2008

கோடையின் வறண்ட ஆற்று மணலில் நடக்கவியலாத வெக்கையாய் ,பாதக்கொப்பளிப்பில் நெய்வேலி காட்டாமணக்கு இலைக்காட்டில் நிழல் தேடுவதாய் இருக்கிறது ஆட்டு மந்தை .

பச்சைப்புற்கள் காணாத ஆட்டு மந்தை கரண்டி , மணலோடு மேயும் காய்ந்த புற்கள் , சூரியனின் ஒளியில் பற்றியெரியும் நேரந்தனிலும் தின்று பசியாற்றும் . மேய்ப்பவனுக்கு கானலாய் தெரியும் பசுமையும் , புல்வெளியும் ..,

தொலை தூர மழை மேகம் வந்து சேர இன்னும் மூன்று மாதங்களுக்கும் மேலாகலாம். தெக்கத்தி காத்து வேகமா வரனும்னு சுடலமாடன வேண்டிக்கிற அவனோட மனசுக்குள்ள , வெயிலோட குரூரம் வந்தா ,என்ன வராட்டி என்ன என்கிற பொத்தாம்பொதுவான எண்ணத்தை வெளிக்காட்டுது.

கிழக்குப்பார்த்த வரப்பு மேலால தெரியற பச்சைய கணக்குப்பண்ணி ஆட்டு மந்தையை அந்த பக்கமா விரட்டுறான் கோணமுத்து.

முந்தா நாளிலேருந்து வீட்டிக்காரி முகத்துல முழிக்கப்பிடிக்காம மந்தையோட கால் போன போக்குல மேய்ச்சலுக்கு ஓட்டிட்டு திரியறான்.
அன்னைக்கும் அப்படித்தான் மசங்கின இருட்டுல மந்தைய மேச்சலுக்கு முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பினா , வீடு திறந்துக்கிடக்க கட்டினவள காணோம்.

மூனாவது வீட்டு வேலாயிக்கிழவி என்னடா பண்ணயத்துக்கார மேச்ச முடிஞ்சி வரீயான்னு பொத்தவாயத்திறந்து சிரிச்சிட்டே கேட்டா

ஆத்தா எம்பொண்டாட்டிய பாத்தியா ஆளயும் காணோம் தேளையும் காணோம்னு சடசடத்தான். கிழவி பாம்படத்த குடாஞ்சிட்டே,வெத்தலய போடுடா வந்துரவா விரசான்னா..

இவனும் ஆர அமர சிவந்து துப்பிட்டு இருக்கையில சும்மாடா கொஞ்சம் விறகுக்கட்டோட வந்தா இவன் வூட்டுக்காரி.
சேலத்தலப்பு ஒத்தக்கோடா ரெண்டு முலைக்கு நடுவில கிடக்க போற வரவன் பார்வயெல்லாம் அது மேலேயே இருக்க இவபாட்டுக்கு எவன் வூட்டு எழபவோன்னு வரளேன்னு

ஏண்டி இவளே கொஞ்ச கூச்ச நாச்சமா நடந்துக்கன்னு சொன்னான் . அவளோ நின்ன இடத்துல இருந்து ம்னு சொல்லி தூக்கி வீசிட்டு இவன ஒரு புழுவப்பாக்கிற மாதிரி பாத்திட்டே வூட்டுக்குள்ளார போன‌

அப்போதான் கிழவி புளிச்சுன்னு துப்பினா ஏண்டா மந்தையில கெடா இருக்காடான்னு கேட்டுக்கிட்டே

இல்லாத்தா மச்சான் மவ கண்ணாலத்துக்குன்னு பொட்டிக்காரனுக்கு வித்துப்புட்டேன், இருக்கிற ஒன்னுக்கும் எதும் இல்ல , மேச்சலுக்குன்னு போற, வாற கெடா பாத்து ஆடு இருக்குன்னான்.

பாத்துடா கோண , காலத்துக்கும் மந்த மேச்சாலும் கெடா இல்லாம பெருகாதுப்பா, பாத்து சூதனாம நடந்துக்கோன்னா இளிச்சபடி..,,
ராத்தங்காம மேச்சலுன்னு அலயுர , மந்தைக்கு ஒரு கெடா இருந்தா கூட போதும்,இல்லாங்காட்டி மேச்சலுக்கு போற இடம் வாற இடம்னு பொட்ட ஆடுக பாத்துக்கும்டா வூட்லேயும் அப்படித்தான்டான்னு ஏதோ எசபாட்டு சொல்லிக்கிட்டு வறட்டு வறட்டுன்னு முதுக சொறிஞ்சிட்டே போன வேலாயிக்கிழவி.

ஏதோ கொஞ்சம் செவத்த தோளா இருக்காளேன்னு இவள கட்டினது தப்பாப்போச்சு, கிட்ட போனாக்கா கெடா நாத்தமா இருக்குன்னு மூக்க பொத்திக்கிறா , பாழாப்போன வெத்தல பாக்குல மஞ்சக்காவி பல்லும், ஏறுக்கு மாறா மூஞ்சியுமா கோணமுத்துன்னு ஆன நமக்கு,
காலம்போன காலத்துல இவள கட்டியிருக்கக்கூடாதுன்னு ஏதேதோ வசையா எண்ணம் வச்சிக்கிட்டு ஆட்ட ஓட்டிக்கிட்டிருந்தவன், கரட்டி மூல மோட்டார் பம்பு செட்ல தண்ணிக்குடிக்கலாம்னு போனான்.

லேசா மூடியிருந்த கதவுக்குள்ளார எண்ணமோ கசமுசானு சத்தம் கேக்கவும் எவனோ பண்ணைய மோட்டார திருடுறாங்கன்னு டபக்குன்னு தொறந்துப்புட்டான்.

பாத்தக்கண்ண மூடாம , வெக்கிச்சு நிக்கவும் பண்ணைய சின்ன முதலாளி பதறாம எழுந்து போறாரு இவம் வூட்டுக்காரி மேலேயிருந்து..,,

இந்தா காலையில குடிச்ச வெரும் வயித்து சாராயம் உன்ன பிடி என்னப்பிடின்னு வயித்த அரைக்குது. கிழக்க விரட்டின ஆட்டு மந்தையில ஒத்த ஆட்ட மேச்சக்கிடா துரத்தி வளைச்சிடுச்சி. பாத்திட்டே இருந்த கோண கையில இருந்த துரட்டியால மாட்டி இழுத்தான் கெடாவை , விதையோட கிழிச்சிட்டு வந்த துரட்டிய ஓங்கி தரையில அடிச்சிட்டு ,

மேட்டுக்கு ஏறிப்போனான் இன்னொருக்கா சாராயம் குடிக்க ..,


சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன் , பாலபாரதி மற்றும் நான்

June 11, 2008

நானும் பாலபாரதியும் சில அடிப்படை விசயங்களில் ஒன்றுப்பட்டவர்கள் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் .., என்னிடம் இந்த புத்தகத்தை தருகையில் ஒரு புன்சிரிப்புடன் தந்தார். ( நாஞ்சில் நாடனின் எல்லா படைப்புகளையும் தந்து உதவிய தலைக்கு நன்றிகள்). புன்சிரிப்புக்கான காரணம் எனக்கு அப்போது புரியவில்லை.

வாசித்து முடித்து திருப்பித்தர செல்கையில் , என் முகம் பார்த்த உடனே சத்தமிட்டு சிரித்தார். என்ன மாப்ளே என்ன சொல்றார் நாஞ்சில் என்று கேட்டபடி..,

ஆனால் அது சிரிப்பில்லை என்ப‌தை என்னால் ந‌ன்றாக‌ப்புரிந்துக்கொள்ள‌ முடிந்த‌து அப்போது..,

தனிமையும் வறுமையும் சிலரை உறவுகளிலிருந்து பிரித்து வைத்திடும், போலி உறவுகளுக்குள் சிக்கிட மனமின்றி தனித்தலைதல் என்ன வகையான மன நெருக்கடியை உண்டாக்கிடும் என்பதை நாஞ்சில் நாடன் தன் வழக்கமான வார்த்தைகளின் கோர்வைக்குள் அற்புதமாக படைத்திருக்கும் நாவல் இது. தன் பிறப்பையே கேவலமாகக்கருதும் உறவுகளின் மத்தியில் சிக்கிடாமல் பம்பாய்க்கு வேலைக்காய் சென்று, தன் தாயின் மரணத்திற்குக்கூட சரியான நேரத்திற்கு சென்றிட இயலாத நாரயணன் என்கிற ஒருவனின் வாழ்வைப்பற்றியது இந்த நாவல்.
சுயப்பரிதாபமும் ,எதையும் வெற்றிக்கொண்டிடா நிலையுமான வாழ்வில் நாரயணன் சந்திக்கும் மனிதர்களும் பயணங்களும்தான் .., பம்பாயில் டெக்ஸ்டைல் எந்திர விற்பனையாளராக வேலை செய்தார் நாஞ்சில் நாடன் என நான் எங்கோ படித்ததுண்டு. முழுக்க முழுக்க அவரின் மெய் அனுபவங்களையே இதில் நாரயணனின் ரயில் பயணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் என நினைக்கிறேன். நாமும் இணைந்து பயணிப்பதைப்போலவே காட்சியமைப்புகளும் வர்ணனைகளும் இருக்கிறது.

மணவாழ்க்கை சிலர்க்கு சரியாக அமைவதில்லை, சிலர்க்கு மணவாழ்க்கைக்கான தகுதியே இருப்பதில்லை. திருமண பேரங்களில் விலைப்பேசவும் ,விலைக்கூறவும் நிறைய‌ போலித்த‌ன‌ங்க‌ளும் பொய்மையும் தேவையான‌ ச‌மூக‌ம் இது.

வ‌ழ‌க்க‌மான‌ பிர‌ம்ம‌ச்சாரிக‌ள் செய்கிற‌ எல்லாவ‌ற்றையும் செய்கிற‌ நார‌ய‌ண‌ன் இறுதியில் திரும‌ண‌ வாழ்க்கைக்கான‌ முடிவென்றை எடுக்கிறார். என்ன‌ நிக‌ழ்ந்த‌து என‌ பால‌ பார‌தியிட‌ம் கேட்டுத்தெரிந்து கொள்ள‌லாம்.
நாஞ்சில் நாட‌னின் எல்லா நாவ‌ல்க‌ளிலும் பின்புல‌மாய் இழையோடும் நாஞ்சில் நாட்டு மொழி இதிலும் வெகு அழ‌காக‌ கையாளப்ப‌ட்டிருக்கிற‌து. நாஞ்சில் நாட்டு உண‌வுப்ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ள் , திரும‌ண‌ விருந்து என‌ பின்புல‌ அழகுக‌ளோடு ஒரு த‌னி ம‌னித‌னின் இய‌லாமை , சுய‌ க‌ழிவிர‌க்க‌ம் என‌ விரியும் இந்நாவலை,

வாசிக்காம‌ல் இருப்ப‌து வெகு ந‌ல்ல‌து. சதுரங்க ஆட்டமான வாழ்வில் மூன்று கட்டங்கள் நேராகவும், ஒரு கட்டம் வளைந்தும் போகும் குதிரையாய் மாற்றிக்கொண்டிருக்கும் தனிமையில் இந்த கதையம்சமுள்ள நாவலை வாசிக்காமல் இருப்பதுதான் நல்லது.

புத்தகம் : சதுரங்கக் குதிரை
ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
வெளியீடு: விஜயா பதிப்பகம்


நித்யாவும் நானும்..,

June 7, 2008

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செளரிராசன் தொடக்கப்பள்ளியில்
படித்தேன்,
செளரிராசன் தந்தைப்பெரியாரின் சீடர் , தீவிரமான நாத்திகவாதி தன் சொத்துக்கள்
அனைத்தையும் விற்று ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் நிறுவியவர்.
தம் தோட்டம் முழுவதையும் அழித்து ஆதிதிராவிட மக்களுக்கான காலனி வீடுகளை
கட்டித்தந்தவர். இன்றும் செளரிராசன் காலனி என்ற பெயரில் வெகு சிறப்பாக
இருக்கிறது.

அவர் வாழ்கின்ற காலத்தில் எவரெல்லாம் அவரை எதிர்த்தார்களோ கொலைச்செய்ய
முயற்சித்தார்களோ அவர்களின் பிள்ளைகள் இன்று அதே பள்ளிகளில் ஆசிரியர்களாக,
தலைமை ஆசிரியர்களாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்திய
ஆண்டில் நானிருந்தேன்.
ஆறாம் வகுப்பில் எனக்கு வகுப்பாசிரியர் திரு . வைத்திலிங்கம் எனக்கான இலக்கிய
ஆர்வத்தை வெகுவாக ஊட்டியவர், சிறப்பான முற்போக்காளர், சாதி மறுப்பாளர். தமிழ்
ஆர்வமிக்கவர். எல்லா அடிப்படை தண்டனைகளிலும் நான் எப்போதும்
சிக்கிக்கொள்வதுண்டு.

பெண்களுக்கான வழியாய் பள்ளிக்குள் வருவது, ரேங்க் சீட்டில் அப்பாவின்
கையெழுத்துப்போடுவது, திடீர் சண்டைக்குள் குதிப்பது, பெண்களை கெட்டவார்த்தையால்
திட்டுவது.
கடைசியாய் சொன்ன குற்றச்சாட்டுக்கு அதிக தண்டனை கிடைக்கும். பள்ளியில் உள்ள
எல்லா மரங்களுக்கும் செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றவேண்டும் , பிரேயர் ஹாலில்
முட்டிப்போடுதல் போன்றவை.

முட்டிப்போட்டுருக்கையில் நாம் திட்டிய பெண் அவள் தோழிகளுடன் வந்து சிரித்தபடி
போகையில் உள்ளுக்குள் இன்னும் வண்டையாக திரளும் கோபம்.

எட்டாம் வகுப்பில் பள்ளி ஆரம்பமாகி ஒரு மாதத்திற்குப்பின் வந்து சேர்ந்தாள் ஒரு
பட்டாம்பூச்சி பெண் , செங்கல்பட்டிலிருந்து வந்திருக்கிறாளென்றும் எவரும் எந்த
கேலியும் செய்திடகூடாதென்றும் அறிமுகப்படித்தி வைத்தார் ஆசிரியர்.

அந்த பெண் ஆசிரியர்க்கு உறவுக்காரியாக வேறு இருந்தபடியால் எச்சரிக்கைப்பலமாக
இருந்தது.

பச்சைக்கலர் பாவாடையும் வெள்ளைச்சட்டையும் பெண்களுக்கான சீருடை..,

வெள்ளைக்கலர் சட்டையும் காக்கி நிற பேண்ட்டும் ஆண்களுக்கானது.

வெகு திருத்தமாக இருப்பாள் , எதைக்கேட்டாலும் உங்கையில கொடுத்தேன், தாழ
உட்கார்ந்தேன் என்பதான பேச்சு வழக்கில் நாங்கள் சிரிக்கையில் அவள் முறைத்தப்படி
போய்விடுவாள்.

சிறிது நாட்கள் கழித்துப்பள்ளிக்கு வந்ததினால் எழுதப்பட்ட நோட்ஸ்களுக்கான
தேவையில் என் நோட்ஸ் அவளிடம் யாராலோ தரப்பட்டிருந்தது.
( குறிப்பு : என் தமிழ்க்கையெழுத்து கொஞ்சம் அழகாக இருக்கும் , வகுப்பில்
ஒழுங்காக குறிப்பெடுத்துக்கொண்டிருப்பேன்)

வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குப்பின் நேரடியாக என்னிடம் நோட்ஸ் கேட்டாள் ,
அங்கு பெண்களிடம் பேசுவது பெரிய குற்றம் அதுவும் இல்லாமல் என்னைப்போன்ற
வன்முறையாளர்களிடம் பெண் பேசுவது மிகப்பெரிய குற்றம்.

மிகத்தெளிவாக தரமுடியாது போடி என்றேன், உடனே அழுது விட்டாள் அவள் என்னை ஏன்
போடின்னு சொல்றன்னு கேட்டப்படி தேம்பி தேம்பி அழத்துவங்கினாள்.

இன்னைக்கு உனக்கு இருக்குடா என்றபடி என் நண்பர்கள் மிரட்டியபடி இருந்தார்கள்,
மதிய உணவு இடைவேளைக்கும் அவள் சாப்பிட போகாமல் அழுதபடி இருந்தாள் ,
மதிய கணக்கு வகுப்பிலும் அவள் கண்கள் கசிந்தபடி இருக்க கணக்கு வாத்தியார் ஒரு
உறுமலுடன் என்னம்மா ஏன் அழற

டேய் யாருடா அந்த பொண்ணுக்கிட்ட தகராறு பண்ணீங்க என்றார்,

மொத்த வகுப்பறையும் அமைதியாய் என்னை நோக்கியது , நான் மெனமாக எழுந்து நின்றேன்,
உனக்கு இதே வேலையாய் போச்சுடா, டிசி கொடுத்தாதான் நீ சரிப்பட்டு வருவ என
மிரட்டத்துவங்க

நித்யா எழுந்து இல்லை சார் எனக்கு உடம்பு சரியில்லை அதான் அழுதேன் என்றாள்,
கணக்கு வாத்தியோ நீ பயப்படாத நான் இவனை பாத்துக்கிறேன் என்றபடி சொல்டா
என்னப்பண்ணிட என மிரட்டலைத்தொடர்ந்தார்.

அவளோ விடாமல் இல்லை சார் , நான் உடம்பு சரியில்லாமல்தான் அழுதேன் என
சாதித்துவிட்டாள். என்னை முறைத்த வாத்தி இந்த முறை தப்பிச்சிட்டடா உனக்கு
இருக்கு என்றார்.

அதற்கடுத்த நாட்களில் வெகு நட்பாகிப்போனோம் டியுசன்களில் பக்கத்து
இருக்கைப்பிடித்து வைத்திருப்பாள், பள்ளிக்கு வரும் நாட்களில் டிபன்பாக்ஸ்
பிடுங்கி தின்கையில் சிரித்தப்படி இருப்பாள் , தினமும் இரு இட்லிகளும் சீனியும்
மட்டுமே இருக்கும்.

எப்போதும் ஜாமெண்டிரி பாக்ஸில் பணம் வைத்திருப்பாள் , அப்போதெல்லாம் ஐந்து
ரூபாய் இருந்தால், போதுமாயிருக்கும் எனக்கு .

வாரக்கடைசியில் வெள்ளிக்கிழமையில் பணம் எடுத்துக்கொள்வேன் எதுக்குன்னு சொல்லிட்டு
எடுத்துக்க என்பாள் , போடி காரணம் மயிரெல்லாம் சொல்லனும்னா நீ தேவையேயில்லை
என்கையில் ,

மயிறு என்ற வார்த்தையில் காது பொத்திக்கொள்வாள் , முகம் எல்லாம் சிவந்து
போய்விடும் , பணம் தந்து விட்டு அழுதபடி போய்விடுவாள், திங்கள் பள்ளிக்கு
வந்தாலும் என் முகம் பார்க்காமல் இருப்பாள் .

என் வீட்டில் ஜெனியா பூக்கள் பூத்திருந்த காலம் அது . ஜெனியா பூக்கள்
பிளாஸ்டிக் பூக்களைப்போன்றவை , வாடாமல் இரு நாட்களுக்கு மேல் இருக்கும் அவை பல
நிறத்தில் பூக்கும்.

சண்டைப்போட்ட நாட்களில் ஒரு பூவை எடுத்துச்சென்று என் டெஸ்க்கின் மேல்
வைப்பேன். ஓரக்கண்ணால் பார்த்தபடி இருப்பாள், சில நிமிட மாயஜாலங்களில் அவள்
தலையில் சிரித்தபடி இருக்கும் அந்த பூ.

வெகு ஆண்டுகளுக்குப்பிறகு வீட்டிற்கு அருகில் பேரூந்து நிலையத்தில் ஒரு பெண்
அடம்பிடிக்கும் மகளோடும் கைக்குழந்தை ஒன்றோடும் இருந்தாள்.

ஏதோ ஞாபகத்தில் அவளையே பார்த்தப்படி இருக்க திடிரென அந்த பெண் தன் கணவனிடம்
என்னைக்கைக்காட்டி ஏதோ சொல்லியபடி தன் கைக்குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.

சாலையை ஒரு சிறுமியின் குதூகலத்துடன் கடந்து வந்து என்னைத்தெரியுதா என்றாள்.
சில ஆண்டுகளில் அவள் வெகுவாய் மாறிப்போயிருந்தாள் , அந்த குழந்தை முகம்
அப்படியே இருந்தது. உங்கையில சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நீ எங்க இருக்க
உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று ஏதேதோ கேட்டபடி இருந்தாள்.

என் வீட்டுப்பக்கம் திரும்பி பார்த்தேன் , வீடு கட்டுவதற்காய்
இடித்துப்போடப்பட்டிருந்த செங்கற்கள் எல்லாம் ஜெனியா பூக்களாய்
மாறிப்போயிருந்தது.

அதே பள்ளியில் படித்த என் தம்பி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து விட்டானாம்