ஒரு தேநீர் கிடைத்தால் மிக நன்றாயிருக்கும்

January 17, 2008

நேற்றைய இரவிலும் உறக்கம் கலைந்து போனது
அறைக்குப்பையில் சிதறிய சிகரட் துண்டுகளென‌
மூலைக்கொன்றாய் உறங்கும் நட்புகள்
லொட‌ லொட‌க்கும் மின்விசிறி ச‌ப்த‌ம் மீறியும்
ம‌ழைக்கால‌த் த‌வ‌ளையின் வ‌ற‌ட்டுக்குர‌லாய்
பீறிட்டு கொல்லும் குற‌ட்டை ஒலி

இப்போது சட்டென்று மனம் நிறைக்கிறது
காலையில் பார்த்த மழலையின் சிரிப்பு

இனி யோசிக்க தேவையேயில்லை
ஒரு தேநீர் கிடைத்தால் மிக நன்றாயிருக்கும்
போய்விட்ட உறக்கத்திற்கும்
இந்த இரவின் த‌னித்த பனிப்பொழிவுக்கும்


எறும்புகளின் உலகம் வாசனைகளாலனது

January 14, 2008

எறும்புகளின் உலகம் வாசனைகளாலனது
ஒற்றைக்கோடு கிழித்து செல்லும்
தண்டவாள புகைவண்டிப்பெட்டிகளைப் போன்றவை
அதன் பயணங்கள்

எப்போதும் ஒன்றையாவது கொல்லாமல்
விடிவதில்லை நமது பொழுதுகள்
வெகு எளிதாய் இருக்கிறது எறும்புகளைக்கொல்வது
எந்த பச்சாதாபங்களும் இன்றி

இருந்தும் என் பயங்கரம் உணராமல்
கால் மீது ஏறத்துவங்கும் அதை நசுக்கிடாம‌ல்
இந்த கவிதையை முடித்திடப்போவதில்லை


ம‌ழலையின் முக‌ம்

January 12, 2008

வாகன நெரிசலில் பின் துரத்தும் ஆட்டோக்கள்
வழிதராத அரசின் பேருந்து
மூச்சடைக்கும் புகையென விடியும்
நகரத்தின் இன்னொமொரு காலையில்
ஏதோ கேள்விக‌ள் என்ன‌வோ ப‌தில்க‌ளாய்
கொல்லும் ப‌ணியின் நெருக்க‌டி செல்பேசியில்

உறும‌த்துவ‌ங்கும் இருச‌க்க‌ர‌ வாக‌ன‌ம்
இழுப்ப‌ட‌த்துவ‌ங்குகிற‌து
முன் நிற்கும் வ‌ண்டியில் அம‌ர்ந்திருக்கும்
பெண்ணின் வாளிப்பான‌ இடுப்பையும்
சுண்டியிழுக்கும் முலையையும் பார்த்து ர‌சிக்க‌ இய‌ல‌வில்லை

அவ‌ள் ம‌டியில் இருந்து என்னை நோக்கி
சிரிக்கும் ம‌ழலையின் முக‌ம்பார்த்துப‌டி


எல்லோரின் ம‌டியிலும் அடுத்த‌வ‌ர்க்கான‌ க‌ற்க‌ள்

January 12, 2008

முகம் பிய்ந்து பெருகிடும் குருதிக்குறித்தான‌

பச்சாதாபங்கள் ஏதுமில்லாமல் சலனமற்று இருக்கிறாய்
உன் மடி நிறைய கற்கள் கனம் தாங்காமல்
தங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன‌

கண்களில் நிரம்பி வழியும் வன்மத்தின்
சாயலில் ஏதோ ஒன்றின் ஊளைக்கூக்குரல் எதிரொலிக்கிறது
உனக்கான கற்களை அவனும் சுமந்தே வருகிறான்

இப்போது செய்வதற்காய் ஒன்றுமில்லை
என் பின்னால் ஒளிந்துக்கொண்டிருப்பதை தவிரவும்

எல்லோரின் ம‌டியிலும் அடுத்த‌வ‌ர்க்கான‌ க‌ற்க‌ள்
என்னிட‌மும் கூட‌


ஒற்றைக்காகிதப்பட்டமென‌

January 12, 2008

ஒரு ஊதுவத்தியின் மரணமென
புகை அடங்கிய மதியத்தில்
இலையென எச்சம் உதிர்த்திடும்
மரப்பறவையின் நிழ‌லில் வார்த்தைக‌ள் தெறிக்கின்ற‌ன‌

நீள அகல சட்டங்களுக்குள் பொருந்தாமல்
ஜனத்திரள் மணற்வெளியில் தனித்து அலையும்
ஒற்றைக்காகிதப்பட்டமென‌ படப்படக்கத்
துவங்குகிறது பிரியம்

காத்திருக்கும் கூண்டின் தங்கக்கதவிலும்
வெள்ளிப்பூட்டின் அழகிலும்
பேசவியலா பெருமெளனம் பள்ளத்தாக்கை
நிரப்பும் வெள்ளெமென மூழ்கடிக்கிறது

ஞாபகத்திற்காய் இந்த கவிதையையும்
அந்த முத்தங்களையும் சேமிக்கின்றேன்
தாங்கவியலா வெக்கையில்
ஒற்றை சிறகை உதிர்த்து பறந்தோடுகிறது
உயிர்ப்பறவை