நாம் சிற்றதழில் என் கவிதைகள்

April 5, 2008

நாம் சிற்றதழில் என் கவிதைகள்

சிங்கப்பூர் நண்பர்களால் வெளிவிடப்பட்டிருக்கிற நாம் (ஏப்ரல்‍ – ஜூன் 2008 ) காலாண்டிதழில் என் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.

1.ஒரு ஊதுவத்தியின் மரணமென
புகை அடங்கிய மதியத்தில்
இலையென எச்சம் உதிர்த்திடும்
மரப்பறவையின் நிழ‌லில் வார்த்தைக‌ள் தெறிக்கின்ற‌ன‌

நீள அகல சட்டங்களுக்குள் பொருந்தாமல்
ஜனத்திரள் மணற்வெளியில் தனித்து அலையும்
ஒற்றைக்காகிதப்பட்டமென‌ படப்படக்கத்

துவங்குகிறது பிரியம்
காத்திருக்கும் கூண்டின் தங்கக்கதவிலும்
வெள்ளிப்பூட்டின் அழகிலும்
பேசவியலா பெருமெளனம் பள்ளத்தாக்கை
நிரப்பும் வெள்ளெமென மூழ்கடிக்கிறது

ஞாபகத்திற்காய் இந்த கவிதையையும்
அந்த முத்தங்களையும் சேமிக்கின்றேன்
தாங்கவியலா வெக்கை உடைய
ஒற்றை சிறகை உதிர்த்து பறந்தோடுகிறது
உயிர்ப்பறவை

2.அந்த குழந்தை என்னைப்பார்த்துதான் சிரித்தது
நன்றாய்த் தெரியும்
என்னை பார்த்து மட்டும்தான் சிரித்தது

முகம் நிரவிய திட்டுத்திட்டான பௌடர் பூச்சும்
கன்னத்தின் ஓரத்திருஷ்டி பொட்டுமாய்
பள்ளிக்கு இழுத்துச்செல்லப்படும்
அதன் அம்மாவின் மிரட்டலை மீறியும்

தனியாய் காற்றில் கைகள் வீசி
எதிரில் இல்லாத உன்னோடு
கண்கள் பார்த்திராத இடம் பொருத்திய கைபேசி உரையாடலால் சிரித்துக் கொண்டே கடந்தது
குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே
இருக்கிறார்கள்
தேவதைகள் எப்போதும் தேவதைகளாகவே

இந்த பிசாசுகள் மட்டும்

நன்றி : நாம் காலாண்டிதழ்


அம்மாவின் முகமாகவும் இருக்கலாம்

March 16, 2008

ஏகாந்த பெருவெளியில் தனிமையின்
இரவினில் வருகிறாள்
பருத்த புட்டங்களையும் கொழுத்த முலைகளையும்
கொண்ட மோகப்பெண்

விரைப்பேறும் சயனத்தினில் அங்கங்களில்
முகம் புதைத்து கலவி யாத்திரையில்
மிருகமாய் தொடங்கிட
வளையல்கள் உடைத்து நகங்களால் கீறி
புணர்கிறாள் என்னை முகங்களை மாற்றி

சொட்டாய் துளிர்த்து பீறிட்டு முடிகையில்
விழிப்புத் தட்டுகிறது
ஆழ்மன உணர்வில் மாறிய முகங்களில்
பார்த்தது

அம்மாவின் முகமாகவும் இருக்கலாம்


இளமை

March 16, 2008

மூன்று பெண்களுடனான பரிசீலனையில்
அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்
வயதின் இளமை மார்பில் தெறித்து
அழைக்க‌

நிராகரிக்கப்பட்டவர்கள் திட்டிய வார்த்தைகள்
காதில் நுழையாமல்
சாக்கடை மழையானது

லிப்ஸ்டிக் வண்ணம் அழிந்து போயிருந்தது
கைப்பையின் கண்ணாடியில் அலங்கரித்துக்கொண்டாள்
அறைக்கான அவளுக்குமான வாடகைப்பணம்
கைமாறிட‌

இருள்நுழைந்து அழைத்துபோனாள்
ஆள்பிடித்த‌வ‌ன் த‌லைச்சொரிய‌
அவ‌னுக்கான‌ உதிரிப்ப‌ண‌ம்
கிடைத்தப்பின் இளித்து மறைந்தான்

எங்கோ துவங்கிய குழந்தையின் அழுகுரல்
எல்லாம் மீறி பீறிட‌
அவஸ்தையில் நெளிகையில் சார்
ஒரு அஞ்சே நிமிசம்
பால் கொடுத்திட்டு வந்திரேன் என்றாள்

கையில் பிரிக்காத‌ உறைக‌ள்
க‌ன‌விலும் காணாத‌ கோல‌ம்
இருந்தும்
ஆடைக்கலைந்து நிற்பவளை
புண‌ர‌ ம‌ன‌மில்லை த‌லையாட்டி
வெளிந‌ட‌ந்தேன்

காம‌த்திலிருந்தும்


காமம் பேரமும் பயமும்

March 13, 2008

ஓர் இரவுக்கு விலைப்பேசத்துவங்கினேன்
இருவர் என்றால் குறைப்பதாய் சொன்னாள்

எனக்கு மட்டுமே போதுமானதாய் சொன்னேன்
பேரம் முடிய பணம் கைமாறிட
ஆவல் முடிந்து வியர்க்கத்துவங்கியது
அவிழ்த்த ஆடைகளுடன் வாவென்றாள்

வியர்வை பிசுபிசுப்பில் நாக்கு
அசைவதாயில்லை
மெல்ல இழுத்து அணைத்துக்கொண்டாள்
முலைகளின் திரட்சியில் மனம் ஒப்பவில்லை

தனித்த இரவுகளில் கிளர்ந்த காமம்
விறைத்த வார்த்தைகள்
ஏதுமில்லாமல்

பணம் தந்து வெளியேறத்துவங்கினேன்

இனி பயம் ஏதுமில்லை அடுத்த முறை ருசி பார்க்கக்கூடும்
தேகத்தையும் மோகத்தையும்


உதடுகளின் குளிர்மை எரிக்கிறது

February 28, 2008

நாம் சந்திக்கும் அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறேன்
சலசலத்து கால்மணற் அரிக்கும் நதி
சாக்கடையின் வீச்சத்தில் கும‌ட்டுகிற‌து

காற்த‌ட‌ங்க‌ளைப்ப‌தித்து விளையாடும் க‌ரை
உடைந்து போய்விட்டிருக்கிற‌து

தனிமையின் வெக்கையில் எப்போதோ முத்தமிட்ட
உதடுகளின் குளிர்மை எரிக்கிறது
யாருமற்ற காட்டின் பெருமழையென
ஓங்காரமிடுகிறது பிரிவு

மீன்கொத்தியின் அலகில் சிக்குண்ட‌ மீனாய்
துடித்தே அட‌ங்குகிறேன்

இருளின் கதவுகள் திறந்து மூடுகிறது
இருளை நோக்கி

ஸ்பானிய நவீன கவிஞர் செசார் வயெஹோ (1892 – 1938 ) நினைவுக்கு


தற்கொலைக்கான காரணங்கள்

February 28, 2008

தற்கொலைக்கான காரணங்கள் வெகு எளிதானவை
எல்லா லாட்ஜிகளிலும் ஒருவராவது
துர்மரணம் கொள்ளாமல் இல்லை

விஷம் , தூக்கு, தண்டவாளம் என‌
சிலவற்றையே எப்போதும் உபயோகிக்கிறார்கள்
தீ வைத்துக்கொள்வது அகோரமானது
முயற்சி தோற்றுவிட்டால் வாழ்வதும்
மிக கொடூரமானது

கடைசி நிமிட மரண பயத்தில்
வாந்தி எடுக்க முயற்சித்திருப்பான் விஷம் குடித்தவன்

கயிற்றை அறுக்க தவித்திருப்பான் தூக்குப்போட்டுக்கொண்டவன்

ட்ராக் மாறிப்போக வேண்டி நின்றிருப்பான் தண்டவாளம் உபயோகித்தவன்

எல்லாம் தோற்றவன் வென்றவன்
வாழ்வை மரணத்தை

த‌ற்கொலைக்கான‌ முய‌ற்சிக‌ளும் அற்ப‌மானவை
த‌ற்கொலையைப்போல‌வே


எல்லா வ‌ன‌மும் தேவ‌தைக‌ளை கொண்டிருந்திருக்கலாம்

February 22, 2008

பிரிவதன் அவசியம் பற்றிய பேச்சுகள்
கண்களின் நீர்மழையில் கரைந்திருக்கிறது
எல்லா வ‌ன‌மும் தேவ‌தைக‌ளை
கொண்டிருந்திருக்கலாம் முன்பொரு கால‌த்தில்

வான‌ம் நிறைந்த‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை
ர‌சிக்க‌ ம‌ன‌மேதுமில்லை ம‌ழை எதிர்நோக்குகையில்
உன‌க்கான‌ பாதையும் துணையும்
நீண்ட‌வை தெளிவான‌வை

என‌க்கான‌ உற‌வு மூன்று நாட்க‌ளின்
வ‌லிக‌ளைப் போன்ற‌வை
சித்திர‌வ‌தைக‌ளை உண்டாக்குப‌வை

அட‌க்கி வைத்த‌ மூத்திர‌ம் பெய்வ‌தை
போன்ற‌ சுக‌ம் கிடைக்கிற‌து
எதைப்ப‌ற்றிய‌ க‌விதைக‌ளை எழுதுகையிலும்

நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்ந்து கொண்டே இற‌ப்பேன்
இப்போதைக்கு நீ அழ‌த்தேவையேயில்லை

உன‌க்கான‌ பாதை நீண்ட‌து தெளிவான‌து


த‌ர‌ப்ப‌ட்ட‌ முத்த‌மொன்று

February 20, 2008

கேட்டுத்த‌ர‌ப்ப‌ட்ட‌ முத்த‌மொன்று
வான் நுழைந்து காற்றில்
எரிந்து மினுக்கிடும் எரிக‌ல்லாகிற‌து

கேட்டுத்த‌ர‌ப்ப‌ட்ட‌ முத்த‌மொன்று
க‌ன்ன‌த்தின் ஓர‌த்தில் காய்ந்த
எச்சிலின் ஈர‌மாகிற‌து

கேட்டுத்த‌ர‌ப்ப‌ட்ட‌ முத்த‌ங்க‌ளுக்காய்
க‌விதைக‌ள் எழுத‌ப்ப‌டுகிறது
பிரிவுக‌ள் உடைப‌டுகிறது
ச‌ண்டைக‌ள் முடிவ‌டைகிற‌து

கேட்ட‌வுட‌ன் த‌ர‌ப்ப‌ட்ட‌ முத்த‌ம்
முத்த‌மாக‌வே இல்லை
எத்த‌னை கெஞ்சியும் அளிக்க‌வே ப‌டாத‌
முத்த‌த்தின் நினைவைப்போல‌


கொண்டாடவேண்டிய மரணத்தை

February 20, 2008

எங்கேவென தெரியாத அழுகை விசும்பலாய்
வெளியேறிக்கொண்டிருக்கிறது
நல்ல மகராசி பூவும் பொட்டுமாய்
போய்ச்சேர்ந்திட்டா
என்பதான வார்த்தைகளில் மரணத்தின்
வாசம் சிறிது குறைக்கப்படுகிறது

இப்போது ஏற்றிச்செல்லலாம் என்கிறாள்
வெள்ளை நிற உடுப்பணிந்தவள்
இறுதியான அறையின் பரிசோதனையில்
பேத்தியின் புதுச்செருப்பு கண்டெடுக்கப்படுகிறது

ஐஸ்பெட்டியின் மெல்லிய ஒலியில்
ஆழ்ந்து உறங்குபவளை போலிருக்கிறாள்
பேரத்திற்கு பின் வாங்கப்பட்ட புதுரோஜா மாலைகள்
இதழ் உதிர்க்கத்துவங்க‌

எல்லோர்க்குமான உறக்கம் விடியலில்
ஒளிந்துக்கொண்டிருக்கிறது
வந்து சேர்ந்திட்ட உறவுகளுக்கான காபி
தம்ளர்களில் ஈ மொய்க்கத்துவங்க‌

என்னை விட்டுப்போறதுக்கு எப்படிடி மனசு வந்தது
ஓங்கார குரலில் சிதறும் துக்கம்
சிறு தூரலிடுகிறது எல்லோரின் கண்களிலும்

பாட்டி சாமிகிட்ட போயிட்டா மாமா
நாமளும் போகலாம் என்கிறாள் ஆர் மோனிஷா
வானம் கடக்கும் அலுமினிய பறவையின்
ஆர்வத்தில் பாட்டி மறந்து சிரிக்கிறாள்


ம‌ர‌ண‌த்தின் அலார‌ம்

February 18, 2008

நான் ம‌ர‌ண‌த்தின் வாச‌ம் சும‌ந்திருக்கிறேன்
என் இற‌ப்பு நெருங்கி வ‌ருகிற‌து
பிரிய‌மான‌வ‌ர்க‌ளின் ஒப்பாரிக்காய் காத்திருக்கிறேன்
மிதிப‌ட‌ போகும் ம‌ல‌ர்க‌ள் சிரித்த‌ப‌டி இருக்க‌லாம்
த‌ங்க‌ளின் முடிவை அறியாது

கிட‌த்தி வைத்திருக்கையில் சொல்ல‌ப்ப‌டும்
க‌தைக‌ள் நானே அறிந்திடாத‌வை
எரியும் மெழுகும் ந‌தியாகி அணைகிற‌து
தாங்கொணா வெம்மையில்

எவ‌ரேனும் அழைக்க‌லாம் எண்ணிக்கொள்கையில்
குழிக்குள் அமிழ்த்த‌ப்ப‌டுகிறேன்
நிர‌ம்பிடும் ம‌ண்துக‌ள்க‌ள் முக‌ம் நிர‌ப்ப‌
இறுதியாய் வான‌ம் பார்க்கிறேன்

விழிப்பின் நடுவில் ஒலிக்க‌த்துவ‌ங்கிடுகிற‌து
அலார‌ம் வைத்திட்ட‌ செல்போன்